இன்று (14) நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் எந்த வகையிலும் கசியவில்லை என்றும், இன்றைய பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
இன்று நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியாகும் வதந்திகளைக் கண்டு பரீட்சார்த்திகள் தேவையற்ற பயமோ அல்லது கவலையோ அடைய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்கா குமாரி லியனகே கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, அனைத்து பரீட்சார்த்திகளும் தேவையற்ற பயமின்றி வழக்கம் போல் இன்று பரீட்சைக்குத் தோற்றுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
நேற்று (13) அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில், இன்று நடைபெறவுள்ள பௌதிகவியல் (Physics) பரீட்சையின் முதலாம் வினாத்தாள்கள் அடங்கிய ஆறு பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தெளிவுபடுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (13) நடைபெறவிருந்த சங்கீதம், நடனம் மற்றும் விவசாயம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பாக்கெட்டுகள் அடங்கிய கொள்கலனுக்குள் (Container) இந்த ஆறு பௌதிகவியல் வினாத்தாள் பாக்கெட்டுகளும் காணப்பட்டுள்ளன.
குறித்த பௌதிகவியல் வினாத்தாள் பாக்கெட்டுகள் பிரிக்கப்படவோ அல்லது எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திய பரீட்சைகள் திணைக்களம், அவை கண்டெடுக்கப்பட்டவுடன் மீண்டும் சீல் வைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
