தணமல்வில, நிக்கவெவ – தெமோதர வௌ பகுதியில் உள்ள கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட போது, சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 5 இலட்சம் ரூபாவை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் மொனராகலை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 37 மற்றும் 45 வயதுடைய இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள், 39 வயதுடைய பொலிஸ் சாரதி மற்றும் 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குவர்.
கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி தணமல்வில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில், கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ஓகஸ்ட் 10ஆம் திகதி மொனராகலை குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கு வந்து, சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க தன்னிடம் 5 இலட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் ஒரு கஞ்சா தோட்டத்தை மட்டும் தீயிட்டு அழித்துவிட்டு, மீதமுள்ள கஞ்சா செடிகளைத் தங்களுடன் எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார். அத்துடன், விசாரணைகளின் போது நிக்கவெவ பகுதியைச் சேர்ந்த “களு” எனப்படும் மற்றொரு நபரும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே, சம்பவத்துடன் தொடர்புடைய 4 பொலிஸ் அதிகாரிகளும் தணமல்வில பொலிஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
