டிட்வா புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகளின்போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மனிதநேயமும் ஒற்றுமையும் நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பணிகளிலும் தொடர வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் அனர்த்தத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் தேசிய நிகழ்வு நேற்று (26) பதுளை வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தியங்கன ராஜமகா விகாரையில் நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி செலுத்தியதுடன், விசேட நினைவு அஞ்சல் முத்திரையும் வெளியிடப்பட்டது.
பேரழிவின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பொதுமக்கள், அரச அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார், மதத் தலைவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
“நாட்டை மீளக்கட்டியெழுப்புவது என்பது கட்டடங்கள், வீதிகள் மற்றும் பாலங்களைப் புனரமைப்பது மாத்திரமல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதும், சிறுவர்களின் கல்வியை உறுதிப்படுத்துவதும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதும் எமது பொறுப்பாகும்” என பிரதமர் குறிப்பிட்டார்.
இனம், மதம், பிரதேசம் உள்ளிட்ட எந்தவித வேறுபாடுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, டிட்வா புயலால் சுமார் 30 இலட்சம் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்ததுடன், அவர்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
