மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், அரச நிதியை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதியாண்டின் ஆரம்பத்திலேயே அமைச்சுகளும் அரச நிறுவனங்களும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை மாதாந்தம் மீளாய்வு செய்ய வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.
விசேட நிபந்தனைகளுக்கு உட்பட்ட திட்டங்கள் தவிர, வருட இறுதியில் பயன்படுத்தப்படாத நிதி பொதுத் திறைசேரிக்குத் திருப்பி அனுப்பப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முதலீட்டாளர்கள் காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 18 மாதங்கள் தேவைப்படுவது முதலீடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்குத் தீர்வாக அரச காணிகளை முதலீட்டுச் சபை அல்லது விசேட காணி வங்கியின் கீழ் கொண்டுவந்து, முதலீட்டின் அளவு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விரைவாக வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
