Headlines

இந்தோனேசியாவில் இரட்டை நிலநடுக்கம்: 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 38 பேர் பலி; சுனாமி எச்சரிக்கை.

இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சனிக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. கிழக்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை அதிகாலை இந்திய நேரப்படி சுமார் 3.28 மணிக்கு, இந்தோனேசியாவின் புளோரஸ் (Flores) பிராந்தியத்தின் கடலோரப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப்புள்ளி 8.557°S அட்சரேகை மற்றும் 121.181°E தீர்க்கரேகையில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கிழக்கு நுசா தெங்காரா (East Nusa Tenggara) பகுதியின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கம் நிலச்சரிவு மற்றும் மின்சாரத் துண்டிப்பை ஏற்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பிராந்தியத்தின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகளும் பாதிக்கப்பட்டன. நிலச்சரிவு காரணமாக சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், நிலநடுக்கத்தின் மையப்புள்ளிக்கு மிக அருகில் உள்ள நாகிகியோ (Nagekeo) பகுதிக்கு மீட்புக் குழுவினர் இன்னும் சென்றடைய முடியவில்லை.

சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் மற்றும் படங்கள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி இருப்பதையும், இடிபாடுகளிலிருந்து தடிமனான தூசிக் மேகங்கள் எழுவதையும் காட்டுகின்றன. சக்திவாய்ந்த நடுக்கம் ஏற்பட்டதும் பீதியடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வீதிகளில் ஓடினர்.

“நிலநடுக்கம் மிகப் பெரியது, அதிர்ச்சி மிகவும் வலுவாக இருந்தது, நாங்கள் குடும்பத்துடன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம்,” என்று தலிபுரா (Talibura) பகுதியைச் சேர்ந்த 51 வயதான நோனா என்ற பெண்மணி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “வீட்டிற்குள் 13 பேர் இருந்தோம், எங்களைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் வெளியே ஓடினோம்,” என்று அவர் விவரித்தார்.

இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தகவலின்படி, குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மௌமேரே (Maumere) தேடல் மற்றும் மீட்பு முகமையின் தலைவர் ஃபதூர் ரஹ்மான் கூறுகையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சேற்றில் புதையுண்டதாக நம்பப்படும் இரண்டு கிராமவாசிகளை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருவதாகத் தெரிவித்தார்.

இந்த சோகம் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் சனிக்கிழமை மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் 158 கிமீ (98 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக GFZ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *