Headlines

இலங்கையின் பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்ளூர் ரீதியாக உற்பத்தி செய்ய திட்டம்!

இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்ளூர் ரீதியாக உற்பத்தி செய்வதற்கு தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சிறுபோக (Yala season) அறுவடை மூலம் நாட்டின் வருடாந்தத் தேவையில் பாதியைப் பூர்த்தி செய்வதே திணைக்களத்தின் முக்கிய நோக்கமாகும் என அது குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காய நுகர்வு சுமார் 320,000 மெட்ரிக் தொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை பதிவான அதிகூடிய பெரிய வெங்காய உற்பத்தி 2014 ஆம் ஆண்டில் பதிவானது, அப்போது சுமார் 6,000 ஹெக்டேயரில் இருந்து 100,000 மெட்ரிக் தொன்கள் அறுவடை செய்யப்பட்டன.

எவ்வாறாயினும், உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் உள்ளூர் சந்தையில் மலிவான இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விற்பனை காரணமாக பல விவசாயிகள் பெரிய வெங்காயச் செய்கையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இந்தப் பின்னணியில், நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, விவசாயிகளை மீண்டும் பெரிய வெங்காயச் செய்கைக்கு ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *