தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான காலநிலையினால் நேரடியாகச் சூரிய ஒளி படுவதால் பலவிதமான வெப்ப நோய்கள் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் இனோகா சுரவீர, இந்த அதிக வெப்பத்தினால் சரும பாதிப்புகள், தசைப்பிடிப்பு மற்றும் ஏனைய பல உபாதைகள் ஏற்படலாம் எனத் தெரிவித்தார்.
சிறுவர்கள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பொதுமக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், நீரிழப்பைத் தடுக்க அதிகளவு காய்ச்சிக் கொதிக்கவைத்த நீரை அருந்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். அத்துடன், வெளிர் நிற ஆடைகளை அணிதல், குடையைப் பயன்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொள்பவர்கள் சரியான அளவில் அதனைப் பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
மேலும், பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மாணவர்கள் பாடசாலை முடிந்து செல்லும்போது குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், தேவையற்ற வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்த்து நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
