ஒரு காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை உற்பத்தி மையமாக விளங்கிய சீனா, தற்போது நிறுவனங்களின் வெளியேற்றத்தை எதிர்கொண்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள் காரணமாக, பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி வருகின்றன. ஏற்கனவே சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை சீனாவுக்கு வெளியே பரவலாக்கி வரும் நிலையில், தற்போது கூகுள் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளின் உற்பத்தியையும் சீனாவிலிருந்து முழுமையாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு முதல் இந்த மாற்றங்களை தொடங்குமாறு கூகுள் தனது சப்ளையர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த உற்பத்தியையும் சீனாவுக்கு வெளியே மாற்ற கூகுள் இலக்கு வைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் அரசியல் மற்றும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், கூகுள் தனது சப்ளை செயினை (Supply Chain) பல நாடுகளுக்கு விரிவுபடுத்த முயன்று வருகிறது. பிக்சல் போன்கள் சீனாவில் விற்பனை செய்யப்படாத நிலையில், அங்கு உற்பத்தி செய்வதில் நிலவும் அபாயங்களைத் தவிர்க்க கூகுள் விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் வியட்நாமில் கூகுள் தனது உற்பத்தியை அதிகரித்து வருகிறது. வியட்நாமில் பிக்சல் போன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவும் இந்த திட்டத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் குறிப்பாக பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவிலும் பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. முக்கிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறுவது இந்தியா போன்ற நாடுகளுக்கு முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
