Headlines

காவி உடை அகற்றப்பட்டு இன்றும் சிறை ஆடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசார தேரர்!

கொழும்பு, ஒக்டோபர் 07 – சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய கலபொட அத்தே ஞானசார தேரர், பலத்த பாதுகாப்பு மற்றும் மக்கள் உற்றுநோக்கலுக்கு மத்தியில் இன்று (07) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஞானசார தேரரின் துறவற ஆடையான (காவி உடை) அகற்றப்பட்டு, அவருக்கு சிறைக்கைதிகளுக்கான சாதாரண ஆடை அணிவிக்கப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் எடுத்த முடிவுக்கு எதிராக சமூகத்தில் பெரும் விவாதமும் கவனமும் எழுந்துள்ள நிலையிலேயே அவர் இன்று இவ்வாறான ஆடையுடன் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பௌத்த பிக்கு ஒருவரின் காவி உடை கழற்றப்பட்டு, சிறைச்சாலை ஆடையுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள பின்னணியில், இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளும் அதிகளவிலானோரின் கவனத்தைப் பெற்றிருந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவர், நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைவாக, சிறைச்சாலை அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவ்வாறு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

தேரரின் காவி உடை நீக்கப்பட்டமைக்கு பௌத்த பிக்குகள் மற்றும் சில பௌத்த அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்ற அடிப்படையில் சிறைச்சாலை திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *