Headlines

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் 6 மாகாணங்களுக்கு 100 மி.மீ க்கும் அதிக மழை எச்சரிக்கை!

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாட்டின் பல மாகாணங்களில் இன்று (14) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, மேல், மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும், அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேல், மத்திய, சபரகமுவ, தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *