Headlines

ரஷ்யாவை அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பக் கொண்டுவரவே டீசல் ஒப்பந்தம்: உக்ரைனிடம் அமெரிக்கப் பிரதிநிதிகள் விளக்கம்!

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ரஷ்யாவை மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரும் உத்தியின் ஒரு பகுதியாகவே ரஷ்ய டீசல் ஏற்றுமதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பிரதிநிதிகள் உக்ரைன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

மியாமி நகரில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின் போது, ட்ரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் உக்ரைன் அதிகாரிகளிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். 4.5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனடியாகத் தயாராக இல்லை என்றும், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட டீசல் ஒப்பந்தம் மூன்று தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உதவும் என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் உலகச் சந்தைகளுக்கு ரஷ்யா 2.25 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான டீசலை விநியோகிக்கும் இந்த ஒப்பந்தம், புடினை எவ்வித நிபந்தனைகளுக்கும் பணிய வைக்காமல் ரஷ்யாவிற்குப் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இருப்பினும், இந்த ஒப்பந்தம் “அமெரிக்க மக்களுக்குச் சரியான தெரிவு” எனக் கூறி ட்ரம்ப் பகிரங்கமாக நியாயப்படுத்தியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் முக்கியத்துவம் வாய்ந்த இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக, அமெரிக்காவில் எரிபொருள் விலையைக் குறைப்பதே ட்ரம்ப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும், ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனின் தாக்குதல்களே உலகளாவிய எரிபொருள் விலையேற்றத்திற்குக் காரணம் என ட்ரம்ப் கூறினாலும், ஈரான் போரே இதற்குக் முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் உக்ரைனின் போருக்குப் பிந்திய மறுசீரமைப்பு நிதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைன் பிரதிநிதிகள் முறையான ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திடவில்லை என்றாலும், ரஷ்யா ஒப்புக்கொண்டால் தாங்களும் எரிசக்தி போர் நிறுத்தத்திற்குச் சம்மதிப்பதாகச் சமிக்ஞை செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *