முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க, லஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இடம்பெற்று வரும் லஞ்சச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யும் நோக்கில் இன்று (12) காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையான நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்படியான நடைமுறைகளைப் பின்பற்றாமல், தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள் மூலமாக மட்டுமே பாஸ்பேட் (Phosphate) ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கு வழிவகுத்தமை மற்றும் அதற்குத் தேவையான ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுக்கொடுக்க உதவியதற்காக, அந்நிறுவனங்களிடம் இருந்து 8.1 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சாமர சம்பத் தசநாயக்க முதன்மைத் தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் அவரது தனியார் செயலாளராகப் பணியாற்றிய சுமத்திபால லியனாராட்சியும் இந்த விசாரணை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
