கனடாவில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புத் துறை ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்துள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகெந்த மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பணியகத்தின் (National Guard Bureau) பிரதானி ஜெனரல் ஸ்டீவன் நோர்தாஸ் (Steven Nordhaus) ஆகியோருக்கு இடையில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் அனர்த்த தயார்நிலை மற்றும் அவசரகால மீட்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் சிறப்பு உபகரணங்களை வழங்குதல், அதன் திறன்களை மேம்படுத்துதல் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தவும், பரஸ்பர நலன் சார்ந்த மேலதிக விடயங்களைக் கண்டறியத் தொடர்ச்சியான உரையாடல்களைப் பேணவும் அமெரிக்காவுக்குப் பாதுகாப்புச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். அனர்த்த தயார்நிலை, மனிதாபிமான உதவிகள் மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்புக்களை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட நலன்களை இந்தப் பேச்சுவார்த்தைகள் பிரதிபலித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
