உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களை இன்று (03) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட தரப்பினரை இன்று பிற்பகல் 3:00 மணிக்குள் தமது எழுத்துமூல ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நேற்றுடன் (02) உத்தியோகபூர்வமாக நிறைவு செய்தது. கடந்த செப்டெம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமான இந்த விசாரணைகளில், உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அத்துடன், இந்த விவகாரத்தை முழுமையான நீதிபதிகள் குழாம் (Full bench) விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் சர்வஜன பலய உள்ளிட்ட பல அமைப்புகளும், தனிநபர்களும் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். உத்தேச திருத்தத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்துக் கவலை தெரிவித்துள்ள மனுதாரர்கள், இதிலுள்ள சில சரத்துகளுக்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) மூலம் மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று கடுமையாக வாதிட்டுள்ளனர்.
தற்போதைய உத்தேச 22 ஆவது திருத்தமானது, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்க முன்மொழிகிறது.
எழுத்துமூல சமர்ப்பணங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் இரகசியத் தீர்மானம், அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு அமைவாகப் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
