உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தென்கிழக்காசியப் பிராந்திய அலுவலகம், தாய் மற்றும் சிசு டெட்டனஸ் (maternal and neonatal tetanus) நோயை ஒழித்து அதனை 10 ஆண்டுகளாகத் தக்கவைத்துள்ளமைக்கும், மலேரியா அற்ற நாடாக ஒரு தசாப்த காலத்தை நிறைவு செய்துள்ளமைக்கும் இலங்கைக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 8 ஆம் திகதியிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் நோய்களை ஒழிக்கும் முக்கிய சாதனைகளைத் தொடர்ந்து பேணுவதற்கும் அரசாங்கம் காட்டி வரும் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட உயர்தர நோய்த்தடுப்பு சேவைகள், பாதுகாப்பான பிரசவ நடைமுறைகள் மற்றும் தேசிய அளவிலான வலுவான அர்ப்பணிப்பு ஆகியவையே தாய் மற்றும் சிசு டெட்டனஸ் நோயை 10 ஆண்டுகளாக ஒழித்து வெற்றிகரமாகப் பேணுவதற்கு உதவியதாக WHO சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், தென்கிழக்காசியப் பிராந்தியம் முழுவதும் இந்த நோயை ஒழிப்பதற்கான உறுப்பு நாடுகளின் பரந்த முயற்சிகளுக்கு இலங்கையின் இந்த சாதனை பங்களிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சான்றிதழைப் பெற்றதிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளாக மலேரியா அற்ற நாடாக இலங்கை தனது அந்தஸ்தைத் தக்கவைத்துள்ளமையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேரியா ஒழிப்பிற்கான நாட்டின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் அந்த நோய் மீண்டும் பரவுவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு என்பனவற்றையே இந்த சாதனைக்குக் காரணமாக WHO சுட்டிக்காட்டியுள்ளது.
மலேரியா அற்ற தென்கிழக்காசியப் பிராந்தியத்தைப் பேணுவதற்கான பிராந்திய முயற்சிகளுக்கு இலங்கையின் இந்த வெற்றி கணிசமான பங்களிப்பை வழங்குவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த இரண்டு முக்கிய மைல்கற்களையும் “குறிப்பிடத்தக்க பொது சுகாதார வெற்றிகள்” என விவரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய அலுவலகம், இலங்கை அரசாங்கத்திற்கும், குறிப்பாக சுகாதார அமைச்சுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பதிகாரியான டொக்டர் நிலேஷ் புத்தவினால் (Dr. Nilesh Buddha) இந்த வாழ்த்துச் செய்தி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
