Headlines

5 மாகாணங்களுக்கு 150 மி.மீ வரை மிக பலத்த மழை சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.

தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் இன்று (13) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வானிலை அமைப்பின் தாக்கம் காரணமாக, இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளிலும் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை அறிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்கள், கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ முதல் 150 மி.மீ வரையிலான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *