Headlines

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சீனக் குழுவினர்: பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணக்கம்!

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்தாலோசனை நேற்று (14) நிதி அமைச்சில் நடைபெற்றது.

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது, ​​இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு சீனா வழங்கக்கூடிய ஆதரவுகள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தக்கூடிய சாத்தியமான துறைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடிப்படையாகக் கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தி, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்திக பிரேமரத்ன மற்றும் நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சீனப் பிரதிநிதிகள் குழு சார்பில் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் டாங் யான்தி (Tang Yandi), இணைப்பாளர் மெங் யுவே (Meng Yue), மூன்றாம் செயலாளர் லூ வென்ஜிங் (Lu Wenjing) மற்றும் இணைப்பாளர் லி சின்வெய் (Li Xinwei) ஆகியோரும் இக்கலந்தாலோசனையில் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *