Headlines

இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ அதிநவீன போதைப்பொருள் பறிமுதல்: தமிழக வெற்றிக் கழக பிரமுகர் இந்தியாவில் அதிரடி கைது!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பாதுகாப்பாகப் சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்ற அதிநவீன போதைப்பொருளுடன், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி உட்பட இருவரை இந்திய மத்திய வருவாய் உளவுத்துறை (DRI) அதிகாரிகள் இன்று (17) நாகப்பட்டினத்தில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகிலுள்ள சிந்தாமணி பிரதான வீதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான என். பூபாலன் (42) மற்றும் பிரதாபராமநல்லூரைச் சேர்ந்த ஜே. சுகன் என்ற சுகநாதன் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சுகநாதனின் சகோதரர் ஜே. பார்த்திபன் (29) மற்றும் டி. சதீஷ் (30) ஆகியோரும் தீவிர விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குக் கடத்தத் தீட்டப்பட்ட சதித்திட்டம்:

நாகப்பட்டினத்தில் இருந்து சர்வதேச கடல் வழியைப் பயன்படுத்தி இலங்கைக்குப் பெருந்தொகையான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 16 பேர்கொண்ட DRI அதிகாரிகள் குழுவினர் பிரதாபராமநல்லூரில் உள்ள சுகனின் வீட்டில் இன்று (17) காலை 6 மணியளவில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.

சுகன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, இந்த சர்வதேச கடத்தல் பின்னணியின் முதன்மைச் சூத்திரதாரி (Mastermind) தவெக பிரமுகரான பூபாலன் என்பது தெரியவந்தது. உடனடியாகச் செயற்பட்ட 8 அதிகாரிகளைக் கொண்ட மற்றொரு தனிப்படை குழு, பூபாலனின் வீட்டை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தியது.

இலங்கைத் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது:

விசாரணையில், பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், அந்தச் சர்வதேசத் தொடர்பைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் இணைந்து போதைப்பொருட்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த அதிமதிப்புமிக்க போதைப்பொருட்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் இலங்கைகக்கும் விநியோகிப்பதற்காகவே நாகப்பட்டினத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாகப்பட்டினம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கட்சியிலிருந்து உடனடியாக நீக்கம்:

இதனிடையே, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயர்தர போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காகவும், கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதற்காகவும் பூபாலனை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்குவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியின் கட்சிப் பொறுப்பாளராகச் பணியாற்றிய பூபாலனுடன் கட்சியினர் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை, பிராந்திய அளவிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் கொடூரமான பரிமாணத்தை மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *