சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ய சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் எடுத்த முடிவை வரவேற்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தீர்ப்பு அனோஜன் சிவராசாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்த வழக்கைக் மிகுந்த கவலையுடன் உன்னிப்பாகக் கவனித்து வந்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் பேரமைதியையும் பெரு ஆறுதலையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொறுமையான இராஜதந்திர அணுகுமுறை, நட்புறவு நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதை மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கை குடிமகனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அனைவரின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுமே இந்த நேர்மறையான முடிவுக்குக் காரணம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சவூதி அரேபிய அரசாங்கத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த விவகாரத்தில் தீவிரமாகப் பணியாற்றிய சவூதி அரேபிய மற்றும் இலங்கை இராஜதந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுவினருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை, அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
“வாழ்வாதாரத்தைத் தேடி நமது கரைகளைக் கடந்து செல்லும் எந்தவொரு இலங்கையரும், தாம் தனித்து விடப்பட்டுள்ளதாக ஒருபோதும் உணரக்கூடாது” என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
