Headlines

இண்டர்போல் மூலம் ‘ரெட் நோட்டீஸ்’: தலைமறைவாக உள்ள பசில் ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை.

நாட்டைப் பொருளாதார சீரழிவிற்கும் வங்குரோத்து நிலைக்கும் தள்ளிவிட்டு, மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசையில் நின்று செத்து மடியக் காரணமான ராஜபக்ச குடும்பத்தின் அத்துமீறிய ஊழல்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை இன்று (14) மேலும் ஒரு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்குச் சொந்தமான கோடிக்கணக்கான பொதுப் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டில் தப்பியோடியுள்ள பசில் ராஜபக்ஷவைக் சர்வதேச பொலிஸாரின் (Interpol) உதவி கொண்டு கைது செய்யத் தேவையான ‘ரெட் நோட்டீஸ்’ (Red Notice) சிவப்பு எச்சரிக்கையைப் பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நீதிவான் இன்று கட்டளையிட்டுள்ளார்.

ரூ. 7.8 மில்லியன் சுற்றுலா நிதியில் தேர்தல் கூத்து:

கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் அரச நிதி, நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படாமல், ஊவா மாகாண சபை தேர்தலின் போது அரசியல் ஆதாயத்திற்காக 12,000 டி-சர்ட்டுகளை (T-shirts) கொள்வனவு செய்து வழங்குவதற்காகத் திசைதிருப்பப்பட்டு அரசாங்கத்திற்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

மக்கள் வயிற்றிலடித்துச் சேர்த்த சொத்துக்களும் – தொடரும் பழிவாங்கல் நாடகமும்:

நாட்டின் கருவூலத்தைச் சுருட்டி, ‘மிஸ்டர் 10 பெர்சண்ட்’ எனப் பெயரெடுத்து ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பையும் சீரழித்த பசில் ராஜபக்ஷ போன்றவர்கள் மீது சட்டத்தின் பிடி இறுகும்போது, வழக்கம் போல இதனையும் அரசியல் பழிவாங்கல் எனக் கூறித் தப்பியோட ராஜபக்ச குடும்பத்தினர் முற்படுகின்றனர். ஆனால், இது பழிவாங்கல் அல்ல; மாறாக நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடிவிட்டுத் தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் காலத்தின் நியாயமான நடவடிக்கையாகும்.

ஒரே நாளில் ராஜபக்ச குடும்பத்தின் மூத்த வாரிசுகளும் உறுப்பினர்களும் நீதிமன்றப் படிகளையேறி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகவும் இண்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளமை, அவர்கள் புரிந்த ஊழல் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *