நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்ச வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பிரான்ஸைச் சேர்ந்த தடயவியல் கணக்காய்வு நிபுணர் யூஸ்ர் கலீல் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்த ஏர்பஸ் ஊழல் விசாரணையில் முக்கிய பங்காற்றிய இவர், வழக்கின் பிரதான சாட்சிகளில் ஒருவராகப் பெயரிடப்பட்டுள்ளார். ஏர்பஸ் நிறுவனத்தின் உப தலைவர் கார்ல் ஹென்னசியும் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பல நாடுகளின் விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் உத்தேச ஒப்பந்தத்துடன் தொடர்புடைய 16 மில்லியன் டொலர் இலஞ்சப் பேரம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இலஞ்சப் பேரத்தின் மூலம் கிடைத்த பணத்தை நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதாகக் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
