ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் ‘எரிசக்தி போர் நிறுத்தம்’ (Energy Ceasefire) எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இது குறித்து மாஸ்கோவிடமிருந்து உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் வெளிவராத நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்புத் தனக்கு முற்றிலும் புதிய செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதமும் ட்ரம்ப் இதேபோன்று ஒரு அறிவிப்பை வெளியிட்ட போதிலும், இரு நாடுகளும் பரஸ்பரம் சர்வதேச அளவில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை காலை தமது ‘Truth Social’ சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்ட ட்ரம்ப், “ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் ‘எரிசக்தி போர் நிறுத்தம்’ அமலுக்கு வருகிறது. இரு தரப்பும் இதற்கு சம்மதித்துள்ளன, இதனை யாரும் மீற வேண்டாம்!” எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த போர் நிறுத்தத்தில் என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்த மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை.
அமெரிக்க ஊடகமான ‘Axios’க்கு அளித்துள்ள பேட்டியில், இது போன்ற ஒரு ஒப்பந்தம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “ஆனால், ரஷ்யர்கள் எரிசக்தி போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தால் உக்ரைனும் அதை ஏற்றுக்கொள்ளும். அதிபர் ட்ரம்ப், [ரஷ்ய அதிபர் விளாடிமிர்] புடினுடன் பேசி இதை முடித்திருந்தால், போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்று எங்களிடம் கூறுங்கள், நாங்கள் தயாராக இருக்கிறோம், அதை ஏற்றுக்கொள்வோம்” என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
கிரெம்ளினுடன் ரஷ்ய டீசல் வாங்கும் ஒப்பந்தம் ஒன்றிற்கு ட்ரம்ப் சம்மதித்தது, ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களைக் கைவிடுமாறு கெய்வை வலியுறுத்தியது மற்றும் ஜெலென்ஸ்கியை மாற்ற வேண்டும் எனக் கூறியது என கடந்த சில நாட்களாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்குமிடையே உராய்வுகள் அதிகரித்து வரும் சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய எரிபொருள் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா, ‘உடனடியாக’ 300,000 தொன் டீசலையும், அதைத் தொடர்ந்து நவம்பரில் 500,000 தொன் டீசலையும் பெற ஒப்பந்தம் செய்துள்ளது. ஜெலென்ஸ்கியின் கடும் விமர்சனத்திற்குப் பிறகு சனிக்கிழமையன்று பேசிய ட்ரம்ப், “ஒரு ஒப்பந்தத்தை செய்யக்கூடிய புதிய தலைவரை அவர்கள் தேர்ந்தெடுப்பது நல்லது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் மீதான போர் நடவடிக்கைகளால் உலகளவில் டீசல் விலைகள் சாதனை அளவை எட்டியுள்ள சூழலில், இந்த விலை உயர்வுக்கு உக்ரைன் போரையே ட்ரம்ப் பிரதான காரணமாகக் கூறி வருகிறார். உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தினால், தானும் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தத் தயார் என ஜெலென்ஸ்கி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ரஷ்யா 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் நாட்டில் தேர்தல்களை நடத்தத் தயார் என்றும் ABC ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
