நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையாக, இந்த ஆண்டில் 23,000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹபரணை மகா வித்யாலயத்தில் புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அரசாங்கம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும், அதிக முதலீடு, சரியான கொள்கை உருவாக்கம் மற்றும் மனித மற்றும் பௌதீக வளங்களை வலுப்படுத்தும் முயற்சிகள் மூலம் கல்வித்துறைக்கு கணிசமான கவனத்தை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
தேசிய பாடசாலைகள் அல்லது மாகாண பாடசாலைகளில் கல்வி கற்றாலும், மாணவர்கள் ஒரே பாடத்திட்டத்தைப் பின்பற்றி ஒரே பரீட்சைக்குத் தோற்றுவதால், அவர்கள் அனைவருக்கும் சமமான கவனம் வழங்கப்பட வேண்டும் என கலாநிதி அமரசூரிய வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் சவால்களை மாணவர்கள் சிறந்த முறையில் புரிந்துகொண்டு எதிர்கொள்ள உதவும் வகையில் தொழில்முனைவு (Entrepreneurship) மற்றும் நிதி கல்வியறிவு (Financial Literacy) உள்ளிட்ட புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி என்பது மாணவர்களை பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளைப் பெறத் தயார்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது என்று பிரதமர் மேலும் கூறினார். பிறருக்கு உதவும், சுற்றாடலைப் பாதுகாக்கும் மற்றும் நாட்டின் ஜனநாயகச் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்கும் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்குவதிலும் கல்வி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
