தமிழ் சினிமாவின் திறமையை மீண்டும் உலக அரங்கில் பேச வைத்துள்ளது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம். இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், இத்திரைப்படத்தில் நடித்த சச்சனா நமிதாஸின் நடிப்பை வியந்து பாராட்டியுள்ளார்.
சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினர் கவிதா குப்தா, அண்மையில் விஜய் சேதுபதியுடன் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டாம் ஹாங்க்ஸுக்கு மூன்று இந்தியத் திரைப்படங்களைக் கவிதா குப்தா பரிந்துரைத்திருந்தார். அவற்றில் மகாராஜா திரைப்படமும் இடம்பெற்றிருந்தது.
கடந்த நவம்பர் 7ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றில் இருவரும் மீண்டும் சந்தித்தபோது, சச்சனாவின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை என டாம் ஹாங்க்ஸ் தெரிவித்ததாகக் கவிதா குப்தா குறிப்பிட்டுள்ளார்.
“என்ன ஓர் அற்புதமான நடிகை! என்னால்கூட அப்படி நடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை” என டாம் ஹாங்க்ஸ் பாராட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் 2024ஆம் ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படத்தில், விஜய் சேதுபதியின் மகளாக ஜோதி கதாபாத்திரத்தில் சச்சனா நடித்திருந்தார். அவரது உணர்வுபூர்வமான நடிப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்தது.
ஹாலிவுட் செல்லும் மகாராஜா!
சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மகாராஜா திரைப்படத்தை ஹாலிவுட்டில் மறுஆக்கம் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. அதில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, மகாராஜா இரண்டாம் பாகத்திற்கான கதையும் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மொழி எல்லைகளைக் கடந்து ஒரு தமிழ் திரைப்படமும் அதன் இளம் நடிகையின் திறமையும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகரது பாராட்டைப் பெற்றிருப்பது தமிழ் திரையுலகிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
.
