Headlines

நேபாளப் பேரிடர்; பாபா வங்காவின் ‘உலக அழிவு’ கணிப்பு வைரல்!

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான வெள்ளப்பெருக்கு மற்றும் பேரழிவுகள் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இந்தத் துயரச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, “உலகம் முழுவதும் பெரும் அழிவுகள் ஏற்படும்” என்று பல்கேரியாவின் புகழ்பெற்ற பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா முன்பே கணித்திருந்ததாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் விறுவிறுவெனப் பரவி வருகின்றன.

பாபா வங்கா அமெரிக்காவின் 9/11 தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று என ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைத் துல்லியமாக முன்கூட்டியே கணித்தவர் எனக் கூறப்படுகிறது. இதனால் இவரது கணிப்புகள் மீது எப்போதுமே சர்வதேச அளவில் ஒருவித மர்மமான எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கம். 1996-ம் ஆண்டிலேயே அவர் இறந்துவிட்ட போதிலும், ஒவ்வொரு வருட முடிவிலும் அவர் கணித்து எழுதி வைத்ததாகக் கூறப்படும் கூற்றுகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

அப்படித்தான், நடப்பு ஆண்டிற்கும் சில குறிப்புகளைப் பாபா வங்கா கணித்து எழுதிவிட்டுச் சென்றுவிட்டார் என்ற தகவல் மீண்டும் இப்போது வைரலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான். நேபாளத்தில் சமீபத்தில் நடந்த கோரமான வெள்ளப்பெருக்கு உலகையே அதிரவைத்துள்ளது. பலி எண்ணிக்கை 389-ஆக உயர்ந்துள்ளதாகவும், 204 இந்தியர்களைக் காணவில்லை என்றும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. “இதுதான் உலக அழிவின் ஆரம்பம்; இதைத்தான் பாபா வங்கா முன்பே கணித்துச் சொன்னார்” என்று இப்போது சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன.

பரப்பப்படும் மற்ற வதந்திகள்:

“இந்த 2026-ம் ஆண்டில், உலகில் 7 முதல் 8 சதவீத இடங்கள் இயற்கை சீற்றங்களால் முற்றிலும் அழிந்துவிடும். பயங்கரமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, மோசமான வானிலை என பூமி பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று பாபா வங்கா கணித்துச் சொன்னாராம். அதற்கு சாட்சிதான் இந்த நேபாள வெள்ளம்” என்று சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல், தங்கம் விலையில் நிறைய மாற்றங்கள் நடந்து, நடுத்தர மக்களின் பொருளாதாரமே மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் பீதியைக் கிளப்பி விட்டு வருகிறார்கள். இயற்கை பேரிடர்கள் ஒருபக்கம் இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போர் வெடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதனால் உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும், பல வங்கிகள் திவாலாகும், பணத்தின் மதிப்பு அதலபாதாளத்திற்குப் போகும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

ரஷ்ய அதிபர் புடின் பதவியில் இருந்து விலகுவார், புதிய தலைவர் நாட்டை ஆள்வார், தைவான் மற்றும் தென் சீனக் கடற் பிரச்சனைகளால் உலக அரசியலே போர்க்களமாக மாறும் என்றும் வதந்திகள் பரவுகின்றன.

ஏலியன்கள் மற்றும் AI பற்றிய கணிப்புகள்:

இவை தவிர, நாம் இப்போது பயன்படுத்தி வரும் AI தொழில்நுட்பம் மனிதர்களை முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நமக்கு எஜமானனாக மாறிவிடுமாம். இதெல்லாம் பத்தாது என்று விண்வெளி பற்றியும் சில பகீர் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பூதாகரமான ஏலியன் விண்கலம் பூமிக்கு வருமாம். அப்போதுதான் மனிதர்கள் முதல்முறையாக ஏலியன்களை நேரில் சந்திப்பார்கள் என்றெல்லாம் இணையத்தில் தகவல்கள் பரபரத்து வருகின்றன.

உண்மை என்ன?

ஆனால், இத்தனை தகவல்கள் இணையத்தில் தீயாகப் பரவினாலும், இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? பாபா வங்கா உயிருடன் இருந்தபோது இதையெல்லாம் எழுதினாரா அல்லது சொன்னாரா என்பதற்கு எந்தவொரு முறையான ஆதாரமும் இல்லை. அதனால் இதெல்லாம் வெறும் வாய்வழிக் கதைகளும், இணையத்தில் பரப்பப்படும் வதந்திகளும்தான் என்பதே நிதர்சனமான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *