பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (11) மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் 1936 ஆம் ஆண்டு பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். உலகம் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ள இவர், திருக்குறள் மற்றும் கம்பராமாயணத்திற்கு எளிய நடையில் விளக்கவுரைகளையும் எழுதியுள்ளார். “பாய்ஸ்”, “சிவாஜி” உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக 2000 ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதையும், 2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் மற்றும் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
