கொழும்பு: மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த பகுதியில், அடையாளம் தெரியாத நபரின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட சிதைந்த மனித தலை ஒன்று இன்று காலை (30) மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 8 மணியளவில், மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு 119 ஊடாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அப்பகுதியில் உள்ள கொட்டகை ஒன்றிற்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். அங்கு, கொட்டகையின் உரிமையாளர் குறிப்பிட்ட இடத்திற்குப் பின்னால், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று கிடப்பது கண்டறியப்பட்டது.
ஆரம்பக் கட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட மனித தலை விலங்குகளால் கடித்து உண்ணப்பட்ட நிலையில் மிகவும் சிதைந்து காணப்படுவதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு மொரட்டுமுல்ல பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இது ஒரு படுகொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் மொரட்டுமுல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
