ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சாய் அபியங்கர் இசையமைப்பில், சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள இத்திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பு சில தொழில்நுட்பக் காரணங்களால் மே 14-க்கு பதிலாக மே 15 அன்று உலகளவில் வெளியானது. ரிலீஸ் தாமதமானதால் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. எனினும், தடைகளைக் கடந்து வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
பணத்திற்காக வழக்குகளை இழுத்தடிக்கும் ஒரு சுயநலமிக்க வழக்கறிஞராக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். கேரளாவிலிருந்து நீதிக்காக வரும் ஒரு தந்தையும் மகளும் இவரை நம்பி ஏமாறுகின்றனர். மனமுடைந்த அவர்கள் நீதிமன்றத்தின் எதிரே இருக்கும் கருப்பசாமி கோயிலில் கண்ணீர் விட்டு முறையிடுகின்றனர். அதன் பின், அநீதிக்கு எதிராகக் கருப்பசாமியே மனித உருவில் (சூர்யா) வந்து எப்படி நீதியை நிலைநாட்டுகிறார் என்பதே படத்தின் விறுவிறுப்பான கதைக் களம்.
சுமார் 130 முதல் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம், வெளியான 10 நாட்களில் உலகளவில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. வரும் வாரங்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
