Headlines

1990 சுவசெரியவினால் மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை அறிமுகம்!

அவசர தேவையுள்ள நோயாளிகளுக்கு விரைவான மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர மருத்துவ சேவையை அறிமுகப்படுத்த 1990 சுவசெரிய அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் வீதித் தடைகளால் ஆம்புலன்ஸ் சேவைகள் தாமதமாகும் பகுதிகளில், நோயாளிகளைச் சென்றடைவதற்கான நேரத்தைக் குறைக்கவும், அவசர மருத்துவக் கவனிப்பை மிகவும் திறமையாக உறுதி செய்யவும் இந்த புதிய சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவப் பிரிவுகள் முதன்மையாக மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்புறங்களில், குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை விரைவாகச் சென்றடைவது கடினமாக இருக்கும் இடங்களில் இயங்கும்.

ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாகவே நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று சுவசெரிய அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்களில், சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னோடித் திட்டமாக (Pilot programme) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு மற்றும் பிற முக்கிய நகர்ப்புறப் பகுதிகள் ஆரம்ப கட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இடங்களாக இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *