2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (க.பொ.த சா/த) பரீட்சை முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இனுள் நுழைந்து, மாணவர்களின் சரியான சுட்டெண்ணை (Index Number) உள்ளிடுவதன் மூலம் முடிவுகளை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பல பரீட்சை நிலையங்களில் வெற்றிகரமாக நடைபெற்றன. இந்த ஆண்டு மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை மீள் திருத்தம் (Re-scrutiny) செய்ய விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதி முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
