வரலாற்றில் முதல் முறை: நெடுந்தீவில் பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையம்!
யாழ்ப்பாணம்: வரலாற்றில் முதல் முறையாக, யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் (CPC) இன்று (05) எட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதனை அறிவித்தார்.
இந்தத் திட்டம், இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் முதல் கட்டத்திற்காக, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 50 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளது. இத்திட்டம் நிறைவடைந்ததும், நெடுந்தீவு மக்களும் கொழும்பு விலையிலேயே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
“நாகதீபத்திலிருந்து அம்மன் கோவிலுக்கு ஒரே படகில் மக்கள் நல்லிணக்கத்துடன் பயணிக்கக்கூடிய காலத்தை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது,” என அமைச்சர் குறிப்பிட்டார். “இனவாதத்தை ஒழித்து, சுத்தமான ஆட்சியை நிலைநாட்டும்” ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இது போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடரும் என்றார்.
