ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
ஜெனீவா: இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மூலம், இலங்கை தொடர்பான விடயங்களைக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) ஆணை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய பிரதான அனுசரணை நாடான பிரித்தானியாவின் பிரதிநிதி, “தற்போதைய அரசாங்கம் மனித உரிமை விடயங்களில் எடுத்துள்ள பாராட்டத்தக்க உறுதிமொழிகளை இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்கிறது,” என்றார். இருப்பினும், “அந்த உறுதிமொழிகளை அரசாங்கம் செயல்களாக மாற்ற வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 22 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன. சர்வதேச அரங்கில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
