Headlines

125 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர்

மும்பை: இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், இன்று (09) மும்பையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கம்

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனுக்கு விஜயம் செய்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. 2026ஆம் ஆண்டில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்தும் நோக்கிலேயே, பிரிட்டன் பிரதமர் தற்போது இந்தியா வந்துள்ளார். அவருடன், 125 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவும் வந்துள்ளது. இந்தக் குழுவில், தலைமைச் செயல் அதிகாரிகள், பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் குழுமங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.


அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை

பிரதமர்களின் சந்திப்புக்கு முன்னதாக, நேற்று மும்பையில் இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் பிரிட்டனின் வணிகம் மற்றும் வர்த்தக செயலாளர் பீட்டர் கைல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஒப்பந்தத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க, கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை மறுசீரமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகவும், ஒருங்கிணைந்த வகையிலும் செயல்படுத்த இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயம்

சர்வதேச வர்த்தக உறவுகளில் ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *