கொழும்பு: இலங்கையின் வெளிநாட்டுப் பணியாளர்கள், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெறப்பட்ட 555.6 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது 140.1 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும்.
வருடத்தின் முதல் 9 மாதங்களில் $5.8 பில்லியன்
இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில், நாடு மொத்தமாக 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணியாளர் வருவாயாகப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட 4,843.8 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது 967.9 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும்.
சுற்றுலா வருவாய்
இந்த அறிக்கையில், 2025 செப்டம்பர் மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானமாக 182.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதில், இந்த இரண்டு துறைகளும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
