Headlines

பிரம்மபுத்திராவில் சீனாவின் அணைத் திட்டம்: 6.4 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் பிரம்மாண்ட திட்டம் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவின் மிக முக்கியமான நீராதாரங்களில் ஒன்றான பிரம்மபுத்திரா நதியில் சீனா பிரம்மாண்ட அணையைக் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு வரும் நீர் வரத்துக் குறையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் விதமாக, அதே பிரம்மபுத்திரா படுகையில் 6.4 லட்சம் கோடி ரூபாய் ($77 பில்லியன்) மதிப்பிலான பிரம்மாண்டப் புனல் மின் திட்டத்தை இந்தியா அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ஆற்றின் நீராதாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


76 ஜிகாவாட் மின்சாரம் இலக்கு

இந்தியாவின் மின்சாரத் திட்டமிடல் ஆணையமான மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2047ஆம் ஆண்டுக்குள் பிரம்மபுத்திரா படுகையிலிருந்து 76 ஜிகாவாட்டுக்கும் (GW) அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யப் புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

  • இந்தத் திட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரம்மபுத்திராவின் 12 துணைப் படுகைகளில் 208 பெரிய நீர்மின் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் 64.9 GW மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
  • மேலும், பம்ப்ட் சேமிப்பு ஆலைகளில் இருந்து கூடுதலாக 11.1 GW உற்பத்தி செய்ய முடியும்.

சீனாவின் அச்சுறுத்தல்

சீனாவின் திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா மற்றும் வங்கதேசம் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் சேர்கிறது.

சீனாவில் ‘யாருங் சாங்போ நதி’ என்று அழைக்கப்படும் பிரம்மபுத்திராவின் மேல் பகுதியில் சீனா அணை கட்டத் திட்டமிட்டுள்ளது. இந்த அணையை சீனா திட்டமிட்டபடி கட்டினால், வறண்ட காலங்களில் இந்தியப் பகுதிக்கான நீர்வரத்து 85% வரை குறையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட சீன எல்லையோரப் பகுதிகளில் அதிக மின்சார உற்பத்தித் திறன் கொண்ட இந்தத் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளது.


திட்டத்தின் செயலாக்கம்

பிரம்மபுத்திரா படுகை, இந்தியாவின் பயன்படுத்தப்படாத புனல் மின்சாரத் திறனில் 80%க்கும் மேல் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செயலாக்கம் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  1. முதல் கட்டம் (2035 வரை): படிப்படியாகச் செயல்படுத்தப்படும். இதற்கு 1.91 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்.
  2. இரண்டாவது கட்டம்: 4.52 லட்சம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

இந்தப் பிரம்மாண்டத் திட்டத்தை பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும், அவற்றில் சில திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *