கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவில் வென்று அசத்தியது, அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சமன் செய்து இழந்த மானத்தைக் காப்பாற்றியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், மூன்றாவது போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்திய அணி கௌதம் கம்பீரின் வழிகாட்டுதலில் இரண்டு வித விதமான முடிவுகளைப் பெறுகிறது என்று கூறியுள்ளார்.
“அவசர மாற்றம் வேண்டாம்!” – கம்பீருக்கு எச்சரிக்கை
ஸ்ரீகாந்த் கூறுகையில், “இந்திய அணி இரண்டு வித விதமான முடிவுகளை கம்பீர் வழிகாட்டுதலில் பெறுகிறது. ஒரு முடிவு அசுரத்தனமாக இருக்கின்றது, இன்னொரு முடிவு படு கேவலமாக அமைகிறது. இதனால் தான் நான் சொல்கின்றேன், அவசரத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கம்பீர் செய்யக்கூடாது. சரியான காம்பினேஷனை அணியில் தேர்வு செய்ய வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.”
“விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து மண்ணில் நாம் அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டோம். கில் மற்றும் பவுலர்கள் அனைவரும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கில் மீண்டு வருவார்
சுப்மன் கில் குறித்து ஸ்ரீகாந்த் மேலும் பேசுகையில், “இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்பட்ட கில், அதன்பின் தனக்குத்தானே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படியெல்லாம் செய்யாமல் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைச் சேருங்கள்.”
“குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் நன்றாகத்தான் விளையாடினார். ஆனால் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா போன்ற ஒரு பெரிய வீரரை மாற்றி கேப்டனாகப் பொறுப்பேற்று இருப்பதால் அவருக்கு (கில்) நெருக்கடி ஏற்பட்டு இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். இதேபோல் ஜெய்ஸ்வால் ஏன் விளையாடவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். அதுவும் கில்லுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.”
“இதையெல்லாம் தாண்டி அவர் மீண்டும் வருவார், ஏனென்றால் அவர் ஒரு சிறந்த வீரர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பெரிய ரன்களைக் குவிப்பார் என நம்புகிறேன்,” என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
