மும்பை: 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி பெறும் முதல் ஐசிசி கோப்பை இதுவாகும். இதன் மூலமாக இந்திய மகளிர் கிரிக்கெட் புதிய அத்தியாயத்தை தொடங்கி இருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது.
இந்திய மகளிர் அணியின் இந்த வரலாற்றுச் சாதனையை அனைத்துத் தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். வீராங்கனைகளுக்கு ஏராளமான பரிசுகளும், ஊக்கத்தொகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வெற்றி ஒருபுறமிருக்க, இந்த அணியின் வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் மறைமுகமாக உதவிய பிரபல நடிகையும், மாடலுமான மந்திரா பேடியின் பங்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மந்திரா பேடியின் மறைமுக ஸ்பான்சர்ஷிப்
2005 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மறைமுக ஸ்பான்சராக மந்திரா பேடி செயல்பட்டது தெரிய வந்துள்ளது. அக்காலத்தில் இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நிதி திரட்டவும் மந்திரா பேடி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
மந்திரா பேடி, சிம்பு நடித்த ‘மன்மதன்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், மாடலிங் மற்றும் கிரிக்கெட் வர்ணனைத் துறையில் அவர் புதிய உச்சத்தை எட்டினார். 2000களின் நடுப்பகுதியில் கிரிக்கெட் வர்ணனையிலும், இன்னிங்ஸ் பிரேக்கிலும் மந்திரா பேடியின் தாக்கம் உச்சத்தில் இருந்தது.
நிதிக்காகப் போராடிய மகளிர் கிரிக்கெட் அணி
2006 ஆம் ஆண்டு முதலே மகளிர் கிரிக்கெட் பிசிசிஐ (BCCI) கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதற்கு முன்பாக இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் (Women’s Cricket Association of India – WCAI) என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது.
2003 ஆம் ஆண்டில், இந்திய வீராங்கனைகள் ஒருமுறை இங்கிலாந்து செல்வதற்கான பயண டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இந்த நிலையை அறிந்த மந்திரா பேடி, பிரபல நகைக்கடை விளம்பரம் மூலம் தனக்கு கிடைத்த மொத்த வருவாயையும் இந்திய மகளிர் அணிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அதேபோல், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களை நாடி இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியை திரட்டவும் அவர் உதவி செய்திருக்கிறார்.
நியூசிலாந்துக்குச் சென்றபோது, ஹோட்டலில் தங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இந்திய வீராங்கனைகள் கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். இறுதியாக சில என்ஆர்ஐ (NRI) குடும்பங்களுடன் ஹோட்டலில் தங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இப்படியான பல கஷ்டங்களை அனுபவித்து இந்திய வீராங்கனைகள் இன்று மகளிர் கிரிக்கெட்டை உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு மந்திரா பேடியும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறார். ஆனால், இந்த உதவிகள் குறித்து அவர் இதுவரை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாதது ரசிகர்களிடையே பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
