கொழும்பு, நவம்பர் 16: 2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.
அக்டோபர் 2025 க்கான சுற்றுலா வருவாய் 186.1 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 2,533.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயுடன் ஒப்பிடுகையில் 4.9% அதிகரிப்பு என்பதையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) அண்மைய புள்ளிவிபரங்களின்படி, 2025 ஜனவரி முதல் நவம்பர் 12 வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,972,957 ஆகும்.
இதில், 443,622 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிடம் இருந்தும், 180,592 பேர் ஐக்கிய இராச்சியத்திடமிருந்தும், 144,308 பேர் ரஷ்யாவிடம் இருந்தும், 123,053 பேர் ஜேர்மனியிடமிருந்தும், 115,400 பேர் சீனாவிடமிருந்தும் வருகை தந்துள்ளனர் என்று SLTDA தெரிவித்துள்ளது.
2025 நவம்பர் 01 முதல் 12 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82,270 ஆகும்.
