கொழும்பு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வரான ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், 2022 ஜனவரி 1ஆம் திகதிக்கும், 2023 நவம்பர் 14ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறப்படும் 275 மில்லியன் ரூபாய்க்கும் (27.5 கோடி) அதிகமான சொத்துக்களின் மூலத்தை வெளிப்படுத்தத் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோத சொத்துக்களில், கொழும்பு 07, தர்மபால மாவத்தையில் உள்ள இரண்டு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள் (பெறுமதி ரூ. 8 கோடி மற்றும் ரூ. 6.5 கோடி), 1.8 கோடி ரூபாய் பெறுமதியான லேண்ட் ரோவர் வாகனம், மற்றும் அவரது மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் உள்ள எட்டு வங்கிக் கணக்குகள் ஆகியவை அடங்குவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
