கொழும்பு, டிசம்பர் 12: 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாக, மன்னார் முள்ளிக்குளத்தில் இரண்டு புதிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை (Wind Power Plants) அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முக்கிய விபரங்கள்:
- அமைவிடம்: மன்னார், முள்ளிக்குளம் பகுதி.
- கொள்ளளவு: தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின் நிலையங்கள் (மொத்தம் 100 மெகாவாட்).
- செயற்பாட்டு முறை: ‘நிர்மாணித்து, உரிமையாக்கி, இயக்கும்’ (Build–Own–Operate) மாதிரியின் கீழ் 20 வருட காலத்திற்கு இத்திட்டம் செயற்படுத்தப்படும்.
ஒப்பந்தம் யாருக்கு? சர்வதேச போட்டி ஏல முறையின் மூலம் 7 முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைப்படி, பின்வரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது:
- விதுலங்கா பிஎல்சி (Vidullanka PLC) மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (லங்கா) லிமிடெட் (David Pieris Motor Company) ஆகியவற்றின் கூட்டமைப்பு.
- வின்ட்ஃபோர்ஸ் பிஎல்சி (WindForce PLC).
