கொழும்பு, ஜனவரி 16: அண்மையில் வீசிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் இலங்கையில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, சர்வதேச நாணய நிதியம் (IMF) உண்மை கண்டறியும் குழுவொன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளது.
இந்தக் குழுவானது ஜனவரி 22 ஆம் திகதி முதல் ஜனவரி 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராயவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) இது பற்றிக் கூறுகையில், தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ், இந்த அனர்த்தம் தொடர்பான கொள்கை தாக்கங்கள் குறித்தும் இக்குழு கலந்துரையாடும் எனத் தெரிவித்தார்.
இது கள நிலவரம் குறித்த தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு உண்மை கண்டறியும் பயணம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
