சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்த கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ கண்டாவை (Masato Kanda) சந்தித்துக் கலந்துரையாடினார்.
டாவோஸ் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளருடனான சந்திப்பு: இதற்கிடையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச கூட்டாண்மைக்கான ஆணையாளர் ஜோசப் சிகேலாவையும் (Jozef Síkela) சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, பொருளாதார மீட்பு, கல்வி சீர்திருத்தம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
“உரையாடலின் ஆன்மா” (A Spirit of Dialogue) எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இம்முறை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கடந்த திங்கட்கிழமை (19) சுவிட்சர்லாந்து சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
