Headlines

விமான நிலைய பிரதம பாதுகாப்பு அதிகாரியே தங்கக் கடத்தலில் ஈடுபட்டாரா? – 21.5 கோடி ரூபாய் தங்கத்துடன் கைது!

கட்டுநாயக்க: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதம பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 215 மில்லியன் ரூபாய் (21.5 கோடி) பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளைக் கடத்த முயன்றபோது, இன்று (14) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 54 வயதான குறித்த சந்தேகநபர், தனது கணுக்கால்களில் சுமார் 6 கிலோகிராம் எடையுடைய 51 தங்க பிஸ்கட்டுகளைக் கட்டி, காலுறைகளால் மறைத்து விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றுள்ளார். இவர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் பதவி வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திற்குள் வேறு யாராவது அவரிடம் இந்தத் தங்கத்தைக் கையளித்திருக்கலாம் எனவும், அவர் நீண்டகாலமாக இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்திருக்கலாம் எனவும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவர் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *