கங்கொடவில (ஜனவரி 30) – புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தரம் 6 ஆங்கிலப் பாடக் கல்வித் தொகுதியில், சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று (30) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்கிடமான கல்வித் தொகுதியைப் பயன்படுத்திப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும், விசாரணைகளைத் தாமதமின்றி நிறைவு செய்யுமாறும் நீதவான் ருவந்திரிகா மாரசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் CIDயினரால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. முன்னைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினர்.
இதன்போது, இடைக்கால மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, CIDயின் விசாரணை மந்தகதியில் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டினார். இந்த விடயத்தில் இரண்டு அதிகாரிகள் மாத்திரமன்றி, கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் பொறுப்பு உள்ளதென அவர் சுட்டிக்காட்டினார். இரண்டு அதிகாரிகளை மட்டும் இடைநிறுத்திப் பிரச்சினையைச் சிறிதாக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், CID அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதாவது, சர்ச்சைக்குரிய இணையத்தளம் கல்வித் தொகுதியின் 51 மற்றும் 52 ஆம் பக்கங்களில் உள்ளதாகவும், ஆனால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அது 47 மற்றும் 48 ஆம் பக்கங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த விசாரணை அதிகாரிகள், தாங்கள் சமர்ப்பித்த 2025 டிசம்பர் 23 ஆம் திகதி அச்சிடப்பட்ட கல்வித் தொகுதியின் 47 மற்றும் 48 ஆம் பக்கங்களிலேயே குறித்த இணையத்தளம் உள்ளதாகத் தெரிவித்தனர். எனினும், ஆசிரியர் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட உண்மையான கல்வித் தொகுதியை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி வாதிட்டார்.
இதனையடுத்து, இரு வேறுபட்ட கல்வித் தொகுதிகளையும் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாகச் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் மாத்திரமே இடைநிறுத்தப்பட்டது ஏன் எனவும் நீதவான் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த CID அதிகாரிகள், கல்வி அமைச்சின் உள்ளக விசாரணையின் அடிப்படையிலேயே, கல்வித் தொகுதியைத் தயாரிப்பதற்குப் பொறுப்பான அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இது தொழில்சார் கவனயீனமா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலா என்பது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கமைய, சர்ச்சைக்குரிய கல்வித் தொகுதி குறித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெறவும், பொதுச் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தவும் நீதவான் CIDக்கு உத்தரவிட்டார்.
மேலும், கல்வி அமைச்சின் செயலாளரின் தொடர்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவரிடமும் சாட்சியாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதவான் குறிப்பிட்டார்.
விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை பெப்ரவரி 20, 2026 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கங்கொடவில நீதவான் ருவந்திரிகா மாரசிங்க CIDக்கு உத்தரவிட்டார்.
