Headlines

அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது: புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம் குறித்து முக்கிய முடிவு?

கொழும்பு: அரசியலமைப்பு சபை அதன் தலைவரும் சபாநாயகருமான ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (03) நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து அரசியலமைப்பு சபை பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டப்ளியூ.பி.சி. விக்கிரமரத்ன கடந்த 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக இருந்து வருகிறது.

இதையடுத்து, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தர்மபால கம்மன்பில அப்பதவிக்கு பதில் அடிப்படையில் நியமிக்கப்பட்டார். எனினும், அவரது பதவிக்காலம் கடந்த 2025 டிசம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இப்பதவிக்காக ஜனாதிபதி முன்னதாக பல பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்த போதிலும், அரசியலமைப்பு சபை அந்தப் பரிந்துரைகளை நிராகரித்திருந்தது.

எனினும், ஜனாதிபதி தற்போது புதிய பரிந்துரைகளை அனுப்பியுள்ள நிலையில், அரசியலமைப்பு சபை இன்று இது குறித்து இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பெப்ரவரி மாதத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை அமரும் அதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (04) நாடாளுமன்ற அமர்வு நடைபெறாது என நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *