புது தில்லி, பிப்ரவரி 6: ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான இலங்கைக் குழுவினர் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது, சமீபத்திய பொருளாதார நெருக்கடி மற்றும் ‘தித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளின் போது இந்தியா வழங்கிய உதவிகளை சுட்டிக்காட்டிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், இலங்கைக்கான இந்தியாவின் நம்பகமான மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
“இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அவரது குழுவினருடன் ஒரு சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றது. எமது ஆழமான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து பேசினோம்.
பொருளாதார நெருக்கடியின் போதும், சமீபத்தில் ‘தித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளின் போதும் இந்தியா இலங்கைக்குத் துணை நின்றது.
இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஒரு உண்மையான மற்றும் நம்பகமான கூட்டாளியாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
