கொழும்பில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃபுக்கு பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்ததாக பாகிஸ்தான் அரசு ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.
“சமீபத்திய சவால்களுக்கு ஒரு சுமூகமான தீர்வைக் காண்பதில் பாகிஸ்தானின் தலைமையை நாடி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்த அதிகாரப்பூர்வ கோரிக்கைகள், அத்துடன் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற உறுப்பு நாடுகள் அனுப்பிய ஆதரவுத் தொடர்புகளை பாகிஸ்தான் அரசு பரிசீலித்தது,” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
“வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாமின் அறிக்கையையும் அரசு கவனத்தில் கொண்டது. நமது சகோதர நாடான வங்கதேசம் வெளிப்படுத்திய ஆழ்ந்த நன்றியை நாங்கள் மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொள்கிறோம். வங்கதேசத்துடன் தோளோடு தோள் நிற்போம் என்பதை பாகிஸ்தான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃபை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதையும் பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது.
“அவர்களின் அன்பான மற்றும் நட்பான உரையாடலின் போது, குறிப்பாக சவாலான நேரங்களில் பாகிஸ்தானும் இலங்கையும் எப்போதும் தோளோடு தோள் நின்று செயல்பட்டதை நினைவுகூர்ந்தனர். தற்போதைய முட்டுக்கட்டையை சுமூகமாகத் தீர்க்க தீவிரமாகப் பரிசீலிக்குமாறு இலங்கை அதிபர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்,” என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
“பலதரப்பு விவாதங்களில் எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிடுகிறது,” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
“மேலும், கிரிக்கெட்டின் உணர்வைப் பாதுகாக்கவும், பங்கேற்கும் அனைத்து நாடுகளிலும் இந்த உலகளாவிய விளையாட்டின் தொடர்ச்சியை ஆதரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்றும் அரசு தெரிவித்துள்ளது.
“பிரதமரும் பாகிஸ்தான் மக்களும் ‘மென் இன் கிரீன்’ அணிக்கு தங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். உலகளாவிய பெருமைக்காகப் போட்டியிடும் போது, எங்கள் அணி விளையாட்டுத் திறனையும் தேசியப் பெருமையையும் களத்தில் வெளிப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
