இலங்கையின் ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டமைப்பையும் முற்றாக மாற்றியமைத்து, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வினைத்திறனான மற்றும் பாதுகாப்பான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
துரித போக்குவரத்து மாற்றம் மற்றும் ‘லங்கா மெட்ரோ’ கொழும்பு நகரில் நிலவும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வாக ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) எனும் விசேட பஸ் சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கொழும்பை மையமாகக் கொண்ட 6 பிரதான வீதிகளில் முன்னோடித் திட்டமாக இது ஆரம்பிக்கப்படவுள்ளது. பின்னர் மேல் மாகாணத்திற்கும், அதனைத் தொடர்ந்து காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 8 முக்கிய நகரங்களில் இச்சேவையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தனிநபர் பஸ் சேவைக்கு மாற்றாக புதிய முறைமை தற்போதுள்ள சிதறடிக்கப்பட்ட பஸ் சேவைகளுக்குப் பதிலாக, ‘கொத்தணி முறைமையின்’ (Cluster Model) கீழ் போக்குவரத்து நிறுவனங்களை உருவாக்கி சேவையை வழங்குவது குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மக்களுக்கு தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இப்புதிய முறைமையின் கீழ் பஸ்களை இயக்குவதற்கு தனியான நிறுவனம் ஸ்தாபிக்கப்படும். குறித்த நிறுவனத்திற்கு லாபம் ஈட்டுவதில் சிக்கல்கள் ஏற்படுமாயின், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஊழியர் நலன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் அவர்களுக்கு முறையான நியமனக் கடிதங்களை வழங்குதல் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களில் சிப் (Chip) வசதி இருந்தும், தகுதி இழப்பு புள்ளிகள் (Demerit point) முறைமை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனை நிவர்த்தி செய்ய Gov.pay செயலி ஊடாக புதிய தொழில்நுட்ப முறைமையை 6-7 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், களனிப் பள்ளத்தாக்கு ரயில் பாதையை நவீனமயமாக்கல், அதிவேக நெடுஞ்சாலைகளில் மின்னணு கட்டண முறைமை அறிமுகம் மற்றும் ‘சிசு சரிய’ பஸ் சேவையை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றியமைத்தல் போன்ற விடயங்களும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டன.
