சிறுவர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான புதிய டிஜிட்டல் கொள்கை (New Digital Policy) எதிர்வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர் நியமனம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு எதிர்வரும் ஆசிரியர் நியமனப் பரீட்சைகள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அமைவாகவே நடத்தப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார். பட்டப்படிப்பு பூர்த்தியாக்கப்பட்ட திகதி தொடர்பில் பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமைய, அமைச்சரவை அனுமதியுடன் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, குறித்த நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வாக அமையாவிட்டாலும், கணிசமான நிவாரணத்தை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மொனராகலை பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட்’ வசதிகள் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், மொனராகலை மாவட்டத்திலுள்ள 132 பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட் பலகைகள்’ (Smart Boards) வழங்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக 10 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் செயலணியின் (Digital Task Force) வழிகாட்டலில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பாடசாலை விஜயம் மற்றும் பெயர் மாற்றம் தனது விஜயத்தின் போது, கும்பிக்கான ஸ்ரீ சண்முகம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் மதுருகெட்டிய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்குச் சென்ற பிரதமர், முதலாம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளைப் பார்வையிட்டார்.
இதன்போது, மாணவர் வரவு அதிகரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கருத்திற்கொண்டு, மதுருகெட்டிய மகா வித்தியாலயத்தின் பெயரை ‘மொனராகலை தர்மராஜா மகா வித்தியாலயம்’ என மாற்றம் செய்வதற்கான அனுமதி பிரதமரினால் வழங்கப்பட்டது.
கல்வித் துறை மேம்பாடு தேசிய, மாகாண, கிராமிய அல்லது நகர வேறுபாடின்றி சரியான தரவுகளின் அடிப்படையில் துரித முடிவுகளை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். மேலும், பிரிவெனா கல்வியை மேம்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் பிரிவெனா குழுவுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
