நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் (Parliamentary Pensions (Repeal) Bill) இன்று (18) நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கலாநிதி ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த ஜனவரி 7 ஆம் திகதி இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்து உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த சட்டமூலத்தைப் பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்றும், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் தீர்ப்பளித்தது.
இதற்கமைய, குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
விவாதத்தைத் தொடர்ந்து, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இரண்டாம் வாசிப்பு அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாம் வாசிப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
